Wednesday, December 11, 2013

புவியில் ஒரு பரிமாணம்

எழிலன் என்ற ஒரு சிறுவன், தன் அதீத ஆன்மீக உணர்வினால் சாதிக்கும் ஒரு துப்பறியும் கதை தான் "ஏழு லோகத்தில் எழிலன்". பண வெறி கொண்டு, புராதன கலைப் பொக்கிஷங்களை கடத்தும் ஒரு கொள்ளைக்காரன், இந்த கதையில் சிங்கார சென்னையையும், கம்புஜா ராஜ்ஜியத்தையும் இணைக்கிறான். 

சென்னையில், அரசு பள்ளியில் ஆறாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் எழிலன், அறிவியலில் மிகவும் ஆற்றல் கொண்டவன். அவனது அறிவியல் அறிவை அவனது தந்தை ஒருவித வேட்கையாக மாற்றியிருந்தார். அது, இது என புதிது புதிதாக இயங்கும் சிறு சிறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருந்தான். இவனது ஆராய்ச்சிக்கென்றே மொட்டை மாடியில் ஒரு சிறு அறையை கட்டியிருந்தான். அதில் பலப்பல ஆராய்ச்சிகளை செய்துகொண்டிருந்தான். அதில் பிரதானமானது இவனது தானியங்கி விமானத்தின் வடிவமைப்பு. அதன் சுவாரசியம், இவனுக்கு மட்டுமல்ல, இவனது நண்பர்களான ராஜெஷிற்கும், வினிதாவிற்கும் அந்த அறையையே வீடாக மாற்றியிருந்தது. 

இந்த வேலையில், தன் அம்மா, அப்பா, தம்பி, நாய்க்குட்டி என அனைத்தையும் மறந்திருந்தான்.

அந்த விமானம் தயாரிக்க ஒரு வித உலோகத்தை பழைய பொருட்கள் விற்கும் கடையில் தேடும் பொழுது தான் அங்கோர் வாட் கோவிலில் இருக்கும் ஒரு பொக்கிஷத்தை அந்த கடையில் காண்கிறான். அதன் பின்னணி ஆராய்ந்து, கலைப்பொக்கிஷங்களை கடத்தி வெளி நாட்டிற்கு அனுப்பும் ஒரு கடத்தல் கும்பலை கண்டு பிடிக்கிறான்.

எப்படி இவனது 'intuition' எனும் உணர்வை ஆன்மிகம் ஒளிர்வித்தது, அப்படி இன்டியூஷனினால் கிடைத்த அறிவு எப்படி இவன் அறிவியலிற்கு உதவியது, அதனால் கண்டுபிடித்த விமானத்தைக்கொண்டு எப்படி தீயவர்களை துரத்திப் பிடித்தது என்று சுவாரசியம் பல வண்ணங்கள் கொண்டதாக இருக்கிறது.

Monday, November 18, 2013

ஏழு லோகத்தில் எழிலன்


அங்கோர் வாட், கம்போடியா.

ரம்யமான தென்றல் அங்கிருந்த காட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த குயில்களை எழுப்பிய வண்ணம் இருந்தது.

கேஹ்மர் ராஜ்யத்தின் கம்பீரத்தை பிரதிபலித்த அந்த கோவிலுக்கு இன்னும் சில வினாடிகளில் மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். இறுக்கத்துடன் காவலாளி ஆங் ஜீ,  கோவிலுக்கு எதிரே நீண்டிருந்த கற்சாலையை பார்த்தபடி  இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.

பாதி இருட்டில் தென்பட்ட ஒரு உருவம் ஒரு பெரிய தடியுடன், கிடு கிடு என்று ஓட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த உருவத்தைக்கண்டதுமே  ஆங் ஜீயின் கண்களில் ஒரு  விடியல் தெரிந்தது.

அவர் வரும் திசை நோக்கி தானும் வேகமாக நடந்தான்.